February 2, 2007

நீயிருக்கும் தூரத்தில்

மன்றாடிக் கேட்ட
நிலாவிற்காய்
உனை வர்ணித்த
கவிதையில் - நிலா
இப்படியாக
பெருமைத்தேடிக் கொண்டது.

நீயிருக்கும் தூரத்தில்
நிலா.

January 30, 2007

ஒர் தேவதை


நிலவொளியில்
எப்போதெல்லாம்
உன்னை என்னி
வெளிர்கிறேனோ

அப்போதெல்லாம்
எனக்கு பின்னால்
சிறகைவிரித்த
ஒர் தேவதை
கண்ணீர் வடிக்கின்றாள்.

காத்துக்கொண்டிருந்தபோதுதான்


உனக்காய்
காத்துக்கொண்டிருந்தபோதுதான்
காதலிப்பதற்கும்
காதலிக்கப்படுவதற்கும்
இடையிலான மிகப்பெரும்
வித்யாசம் அறிந்தேன்..!

உன்னால் மட்டும் !


உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது

எந்தபூவை
சூடினாலும்
இரண்டாமிடத்துக்கு
தள்ளிவிடுகிறாய்..?

January 29, 2007

மீராவுக்காக...


தம்புராக்கள்
ஏங்குகிறது
மீராவுக்காக...

மீராவோ
செல்போன் பிடியில்?

January 27, 2007

தொலைந்த தொப்புள் கொடி..

உறவுகள் தேடி
ஓடாய் தேய்த - ஒரு
உயிரின் ஓளமிது..

தொப்புள் கொடியை
தொலைத்த முதலே
தொலைவில் தெரியும்
தொலைந்த விடியலை - தேடும்
தோய்ந்த உயிரிது...

அம்மா என்றேன்
அம்மாவிடம் அல்ல
ஜய்யா என்றேன்
அப்பாவிடம் அல்ல
அண்ணா என்றேன்
அண்ணன் அங்கில்லை
அக்கா என்றேன்
அவளும் சொந்தமில்லை...

இருந்தும்
சில நொடி உறவுகள் -எனை
மெல்ல திண்ணத் துடிக்கும்
வயிற்று பசிக்காக....

பால் சோறு உண்டதில்லை
தாலாட்டும் கேட்டதில்லை
படுத்துறங்க தோளுமில்லை
விடைக்கான வழியுமில்லை
விடிந்தாலும்- எனக்கு
விடியலில்லை...

எஞ்சிய சோறும்
எச்சில் இலையும்
எப்போதும் எனக்காய்
எங்கேயும் காத்திருக்கவில்லை....

இவற்றை நம்பியே
இரவல் உயிரை
இன்னமும் வாழவைகிறேன்...

மாமனில்லை
மதனி இல்லை
தாத்தா பாட்டி
பார்த்ததில்லை....

இன்னும் கிடைக்காத
உறவுகளுக்கு
தெரியாத பெயர்கள்....

தாய்முகம் பார்ததில்லை
தாய்மொழியும் அறிந்ததில்லை
தகப்பனார் தெரியவில்லை
தாகம் தான் திறவில்லை...

அனாதை தனிமைக்குள்
அரசாலும் ராஜாவாய்
அண்ணமிட்ட ஆன்மாக்கள்
அன்றைய உறவுகளாய்..

குப்பை தொட்டிகள்
கோயில் மதில் சுவர்கள்
யாருமற்ற மணல் மேடுகள்
இவைகள்-
பெற்றெடுத்த
சிற்றரசர்கள்
சில்லறைக்காக - இன்னமும்
சிணுங்கிக்கொண்டு தான்
சீருகிறார்கள்....

ஒரு நிமிட உறவால்
முறை தவறிய உன்னால்

உறவுகளைதொலைத்து - என்னுள்
தொலைந்துக் கொண்டிருக்கிறேன்...

உன்னையும் தான்...

January 26, 2007

காகித கருவறைகள்


சிலருக்கு சில
உறுப்புக்கள்
தேவையற்றது -
ஆறாம் விரல்போல்!

எனக்கு
கருவறை...

எனக்கும்
பாஞ்சாலிக்கும்
வித்தியாசம்
உண்டெண்றால்
அவள் பத்தினி
நான் ?????

வினாக்குறிகள்
மட்டுமே
விடையாய்
முளைக்கின்றன!

என்
கருவறையை
காகிதமாய் கசக்கியதில்
உனக்கும் பங்குண்டு
என்னவனே!

சாட்சி
என்(?) குழந்தை!